Friday, 5 February 2021

Vairagya Satakam - Tamil Meaning

 

1.

மலரும் மொட்டென, மினுமினுக்கும், அழகிய மதிப் பிறையினை தலையில் அணிகலனாகக் கொண்டு திகழ்கின்றான் அரன். அலைபாயும் தன்மையதான, காமனெனும் விட்டிலை விளையாட்டாக எரித்தவன் அவன். அனைத்து நலன்களும் தன்னிடம் உடைத்தவன் அவன். மருளெனும் அளவிலா அகவிருளினை நீக்குவோன் அவன். யோகியரின் உள்ளத்தின் ஞான ஒளியெனத் திகழ்கின்றான் அரன்.

 

2.

கற்றவர்கள் பொறாமை கொண்டுள்ளனர். திறமையுள்ளவர்கள் அகந்தை கொண்டுள்ளனர். மற்றவர்களை அறியாமை கவர்ந்துள்ளது. எனவே, இன்சொற்கள் (உரைப்பவர், ஏற்பவரின்றி) நைந்து போயின.  

 

நீதி சதகத்தின் இரண்டாவது செய்யுள் போன்று, இந்த செய்யுளும் திணிக்கப்பட்டதாகக் கருதுகின்றேன்.

 

3.

புதையலைத் தேடி, பூமியைத் தோண்டினேன். மலைகளினின்று தாதுக்களை உருக்கினேன் (பொன்னுக்காக). கடல் கடந்து சென்றேன் (செல்வம் தேடி). மன்னர்களை மிக்கு முயன்று மகிழ்வித்தேன் (செல்வத்திற்காக). மந்திரங்களின் வழிபாட்டினில், மனத்தினை ஓர்முகப் படுத்தி, மயானத்தினில் இரவுகளைக் கழித்தேன் (எண்சித்திகள் பெற வேண்டி). ஆனால் உடைந்த சல்லிக் காசு கூட கிடைக்கப் பெற்றிலேன். வேட்கையே! இப்போதாவது, என்னை விட்டுவிடு.

 

இப்போதாவது, என்னை விட்டுவிடு - மனநிறைவு கொள்வாய்

 

4.

கடப்பதற்கரிய பாதைகளைக் கடந்து பல நாடுகளில் அலைந்து திரிந்தும், பயன் ஏதும் கண்டிலேன். சாதி, குலத்திற்கு இயல்பான பெருமைகளை விடுத்து, பல்லோரிடம் (செல்வந்தர்களிடம்) பணி செய்தும் பயனில்லை. தன்மானத்தை விடுத்து, பிற இல்லங்களில், காக்கையைப் போன்று, அச்சத்திலும் உணவு உண்டேன். பாவச் செயல்களிலேயே திளைத்துப் பெருகும், வேட்கையே! நீ நிறைவு பெற்றாயில்லை.

 

காக்கையைப் போன்று – காக்கையை அழைத்து உணவிட்டாலும், அது விரட்டிவிடுவார்களோ என்று அஞ்சியே உண்ணும்.

 

5.

தீயோர்களை ஏற்றுதற்கு வேண்டி, அவர்தம் கடுஞ்சொற்களையும் எப்படியோ பொறுத்தேன். உள்ளக் கண்ணீரை அடக்கிக்கொண்டு, வெறிய மனத்துடன் புன்னகைதேன். சித்தத்தினை மழுக்கி, புத்திகெட்டவரைத் தொழுதேத்தினேன். ஆசையே, வீணாசையே! இன்னும் எத்தனை விதமாக என்னை ஆட்டுவிப்பாய்?

 

6.

தாமரை இலைமேல் நீர் போன்ற (நிலையற்ற) எமது உயிர் மூச்சுக்காக, பகுத்தறிவினையும் துறந்து, யாம் என்னென்ன செய்யவில்லை? (செல்வச்) செருக்கினால் மதியிழந்த செல்வந்தர் முன்னிலையில், வெட்கமின்றி, தற்புகழ்ச்சியெனும் பெரும் பாதகத்தையும் செய்தோமே!

 

7.

பொறுத்தோம், மன்னிப்பதற்காகவல்ல. இல்லறத்திற்கு உகந்த சுகத்தினைத் துறந்தோம், மன நிறைவினால் அல்ல. கடும் குளிர், புயல் காற்று, மற்றும் கொடிய வெப்பத்தின் துன்பங்களைப் பொறுத்தோம், ஆனால் தவமியற்றுவதற்காகவல்ல. பகலிரவாக, மூச்சினை யடக்கி தியானித்தோம், செல்வத்திற்காக, சம்புவின் திருவடிகளுக்காகவல்ல. முனிவர்கள் இயற்றும் செயல்கள் யாவும் இயற்றினோம், ஆனால் அதற்குண்டான பயன் கிடைக்கப் பெற்றிலோம்.

 

பொறுத்தோம் – இயலாமையினால் அல்லது ஏதும் ஆதாயத்தைத் தேடி.                            

இல்லறத்திற்கு உகந்த சுகத்தினைத் துறந்தோம் - செல்வம் தேடுவதற்காக.

கடும் குளிர், புயல் காற்று, மற்றும் கொடிய வெப்பத்தின் துன்பங்களைப் பொறுத்தோம் – செல்வம் ஈட்டுவதற்காக.  

பயன் கிடைக்கப் பெற்றிலோம் – நோக்கம் தவறாக இருந்தால் செய்யும் காரியங்களுக்குத் தகுந்த பயன் கிடைக்காதென.

 

8.

சுகங்களை யாம் அனுபவிக்கவில்லை, (ஆசைகளால்) யாம்தான் விழுங்கப்பட்டோம். தவம் இயற்றினோமில்லை, யாம்தான் தவித்துக்கொண்டிருக்கின்றோம். காலம் செல்லவில்லை, யாம்தான் (சாவை நோக்கி) சென்றுகொண்டிருக்கின்றோம். ஆசைகள் தீர்ந்தபாடில்லை, யாம்தான் தேய்ந்துகொண்டிருக்கின்றோம்.

 

9.

முகமெல்லாம் சுருக்கங்கள் விழுந்தன, தலை முடி யாவும் வெளுத்தன, உறுப்புக்கள் யாவும் தளர்ந்தன, ஆனால், வேட்கை மட்டும் இளமையாகவுள்ளது.

 

10.

இன்பம் துய்க்கும் இச்சை தீர்ந்துவிட்டது. மனிதரிடை மரியாதை குன்றிவிட்டது. உயிருக்குயிரான, சம வயது நண்பர்கள், முன்னமே வானுலகம் சென்றுவிட்டனர். தடி பிடித்து, மெள்ள எழுந்திருக்கலாயிற்று. கண்களைப் பேரிருள் சூழ்ந்துகொண்டது. ஐயகோ! வெட்கங் கெட்ட இவ்வுடல், சாவினை இன்னும் அஞ்சுகின்றதே!

 

கண்களை பேரிருள் சூழ்ந்தது – சாலேசரம் (cataract) எனப்படும் வெள்ளெழுத்து (short sight) அல்லது நெட்டெழுத்தினால் (long sight).

 

11.

நம்பிக்கையெனும் ஆற்றினிலே, கற்பனைகளெனும் நீர் பாயும். அதனில், வேட்கைகளெனும் பேரலைகள் எழுந்திடும். பற்றெனும் சுறா மீன்கள் ஆங்கே இரை தேடி நிற்கும். ஐயமெனும் பறவைகள் வானிலே சூழ்ந்திருக்கும். உள்ளத் துணிவெனும் மரத்தினையும் வீழ்த்திச் செல்லும் அதன் நீரோட்டம். மதி மயக்கமெனும், கடக்க இயலா, ஆழப் பெருஞ்சுழல்கள் அதன் நடுவினிலே. பெருங் கவலையெனும் செங்குத்துக் கரைகள் இரு மருங்கிலும். இத்தகைய பேராற்றினைக் கடந்து, அக்கரை சென்ற, தூய உள்ளம் படைத்த, பெரும் யோகியரே களித்திருப்பர்.  

 

12.

உலக வாழக்கை நடைமுறைகளினால் நலன் கிடைக்குமென நான் கருதவில்லை. சிந்தித்துப் பார்த்தால், சேர்த்து வைக்கும் புண்ணியங்கள் எனக்கு அச்சத்தையே தருகின்றன. ஏனெனில், புண்ணியங்கள் சேரச் சேர, இச்சைகள் பெருகி, பல காலம் புலன் நுகர்ச்சிகளில் ஈடுபட்டோர், மிக்குத் துயரமே அடைகின்றனர்.

 

உலக வாழ்க்கை – பிறப்பு, இறப்பெனும் தீராத சமுசாரச் சுழற்சி.  

உலக வாழ்க்கை நடைமுறைகள் – பயனை எதிர்நோக்கி நாம் செய்யும் கருமங்கள். அதனால் புண்ணியங்கள் சேர்கின்றன. அந்தப் புண்ணியங்கள், மேலும் மேலும் இச்சைகளைத் தோற்றுவிக்கின்றன. நாம் பயன் கருதாது இயற்றும் செயல்கள் மட்டுமே, நம்மை சமுசாரச் சுழற்சியினின்றும் விடுவித்து, வீட்டினைச் சேர்க்கும்.

 

13.

புலன் நுகர்ச்சிகள், நீண்ட நாட்கள் நம்மோடிருந்தாலும், என்றாவது ஓர் நாள் அவை நம்மை விட்டகலும். எனவே, அவற்றினை நாமே விட்டுவிடுவதனால் என்ன குறையென, மக்கள் அவற்றை விடுவதில்லை? அவை தானாக நம்மை விட்டுச்சென்றால், மனத்தில் பெருந் துயரினை உண்டாக்குகின்றது. ஆயின், அவற்றை நாமே விட்டுவிட்டால், மனவமைதியெனும் அளவிலா ஆனந்தம் அடையலாம்.

 

தானாக நம்மை விட்டுச் சென்றால் – நீண்ட கால புலன் நுகர்ச்சிகளினால், உடலுறுப்புக்கள் வலிமை குன்றி, இன்பம் துய்க்க முடியாமற் போவதனால், மன உழற்சிதான் மிஞ்சும். இந்த நிலையில், எஞ்சி நிற்கும் வேட்கையினை வாசனைகளென்பர். மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுப்பது இந்த வேட்கையின் விளைவே. புலனடக்கத்தினை நாமே மேற்கொண்டு, முத்திக்கு வித்திடலாம் என்பது இச்செய்யுளின் கருத்து.

 

14.

ஆகா! பரம்பொருளின் ஞானத்தினால், பகுத்தறிவு பெற்ற தூய அறிவாளிகள், செயற்கரியதைச் செய்கின்றினர். அதாவது, ஆசைகள் அற்றவராகி, தமக்கு இன்பங்கள் அளித்திடும் (ஏற்கெனவே உள்ள) செல்வத்தினையும் முற்றிலும் துறக்கின்றனர். ஆனால், நாமோ, முன்னம் அடையப் பெறாத, இப்போது இல்லாத, இனி பெரு முயற்சியினாலும் அடைய முடியாத, வெறும் கற்பனையில் மட்டுமே இருக்கும் ஆசைகளைக் கூட துறக்க இயலோம்.

 

பகுத்தறிவு – நித்தியம், அநித்தியம் (மெய், பொய்) என்னவென்றறியும் விவேகம்.

 

15.

மலை குகைகளில் வசித்துக்கொண்டு, பரஞ்சோதியினை தியானம் செய்வோர், பேறு பெற்றோர். அவர்தம் மடியினில், பறவைகள், சிறிதும் அச்சமின்றி அமர்ந்து, அவர்களின் ஆனந்தக் கண்ணீரினை அருந்தும். ஆனால், நாமோ, வெறும் கற்பனையில் மட்டுமே நிறுவிய, மாளிகைகளிலும், நதிக்கரையிலும், மலர்த் தோட்டங்களிலும் களித்துக் கொண்டு, ஆயுளைக் கடிதில் வீணாக்கினோம்.

 

பரஞ்சோதி – சோதி வடிவமெனப்படும் பரம்பொருள்.

 

16.

பிச்சைதான் உணவு, அதுவும் சுவையற்றது, நாளைக்கு ஒரு முறை மட்டுமே. படுக்கை தரையே. உற்றார், தனதுடல் மட்டுமே. ஆடையோ, நைந்த, நூறு கிழிசல் கந்தை. ஆயினும், இச்சைகள் விடாதே, அய்யகோ!

 

உற்றார் – சேவை செய்வதற்கு

 

17.

ஊன் திரட்சியெனும் மார்பகங்களை, பொற்கலசத்தின் உவமை கூறினர். எச்சில், கோழை வழியும் முகத்தினை, மதியினுக்கு நிகரென்றனர். சிறுநீர் கழியும் இடையகத்தினை, உயர் களிற்றுக் கும்பமென்றனர். ஐயகோ! இகழ்வான உருவத்தினை, தலைசிறந்த கவிஞர்களும், உயர்த்தினரே.  

 

18.

மாதினுக்கு ஓர் பாகத்தினை அளித்த அரன், ஆசைகளுடைத்தோரில், தனித்துத் திகழ்கின்றார். பெண் தொடர்பறுத்த, பற்றற்றோரிலும், அவரை மிகுந்தவர் யாருமில்லை. ஆனால், (காம) மயக்கமுற்ற மற்ற மனிதர்களோ, தடுக்க இயலாத, காமனின் நச்சரவு அம்புகளினால் துளைக்கப்பட்டு, புலன் இச்சைகளைத் துய்க்கவியலார், துறக்கவும் இயலார்.

 

ஆசைகளுடைத்தோரில் – பற்றற்றோரில் – மாதினுக்கோர் பாகம் அளித்ததினால், அவர் ஆசையுடைத்தோரிலும், காமனை எரித்ததனால், பற்றறுத்தோரிலும் எண்ணப்படுவார். அதாவது இல்லறத்திலும், துறவறத்தினைக் கடைப்பிடிக்க இயலும் என்பதை அவர் உணர்த்துகின்றார். 

உலக மக்கள், காமனின் அம்புகளால் துளைக்கப்பட்டு, புலன் நுகர்ச்சிகளில் ஈடுபடுவதனால், உடல் தளர்ந்தனர். துய்க்க இயலாத அந்த நிலையிலும், அவற்றினை வலியத் துறக்க இயலாது, வேட்கைகளினால் உந்தப்பட்டு, பிறவிதோறும் உழல்கின்றனர் என்பது கருத்து,  

 

19.

விட்டில் பூச்சி, நெருப்பின் தன்மையறியாது, விளக்கின் கொழுந்தினில் விழும். மீன், தூண்டில்முள் இரையென்றறியாது, அதனை உண்ணும்.  ஆனால் இங்கு நாமோ, இச்சைகள், மிக்கு சிக்கலும், ஆபத்தும் நிறைந்ததென்றறிந்தும், அவற்றினின்று விடுபட மாட்டோம். அய்யகோ! மோகத்தின் மகிமை மிக்கு வலியதே

 

மோகம் – மருள்

 

20.

வேட்கையினால் நா வறண்டால், மணக்கும் இனிய நீரருந்துகின்றான். பசியெடுத்தால், கறிக்கூட்டு கலந்த சோறு உண்கின்றான். காம நெருப்பெழுந்தால், மனைவியை இறுக்க அணைக்கின்றான். உடல் நோய்களைத் தணித்தல்தான் சுகமென மக்கள் முரண்பாடாக எண்ணுகின்றனர்.

 

சுகமென – உடல் நோய்கள் என்றும் தீராதவை. அவற்றை அவ்வப்போது தணித்தல் உண்மையான சுகமன்று. இந்நோய்களைத் துறத்தலே சுகமளிக்குமென்பது கருத்து.

 

21.

உயர்ந்த மாளிகைகள், கற்றோரால் போற்றப்படும் மக்கள், அளவற்ற செல்வம், பண்பு, அன்பு, இளமை ஆகியவை கூடிய மனைவி - இவற்றைக் கண்டு, அறிவற்ற முட்டாள்கள், இவ்வுலகம் அழியாததெனக் கருதி, சமுசாரமெனும் சிறையில் புகுகின்றனர். ஆனால், பேறுடைத்தோரோ, இவை யாவற்றின் நிலையின்மையினைக் கண்டு, இவற்றைத் துறக்கின்றனர்.

 

22.

உணவின்றி, பசியினால் துயருற்ற, நலிந்த முகத்தோடு கூடிய மனைவியையும், எவ்வமயமும் (பசியினால்) அழுதுகொண்டு, தாயின் கிழிந்த ஆடையைப் பிடித்திழுக்கும் குழந்தைகளையும் காணாவிட்டால், எந்த தன்மானமுள்ள மனிதன், கேட்டால் மறுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தினால், தழுதழுத்த குரலில், குழறிய சொற்களில், தனது எரியும் வயிற்றிற்காக, தாரீர் என்று கேட்பான்?

 

தன் வயிற்றுக்காக இல்லாவிடினும், பசியினால் வாடும் தனது மனைவி, மக்களைக் கண்ட தன்மானமுள்ள மனிதன், கேட்டால் மறுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தினையும் மீறி, இரப்பான் என்பது கருத்து.

 

23.

தன்மானமெனும், போற்றத்தக்க, முடிச்சினை அவிழ்ப்பதில் வல்லதாக, மதிக்கத் தக்க நற்பண்புகளெனும் மலர்ந்த தாமரைகளுக்கு (மூடிக்கொள்ளச் செய்யும்) முழுமதியாக, வெட்கமெனும் அடர்ந்து பரந்த கொடிகளை அழித்தெறியும் கோடரியென – நிறைக்க இயலாத இந்த வயிற்றுக் குழி நம்மை இழிவுபடுத்துமன்றோ!

 

தன்மானமெனும் முடிச்சு – நமக்கு நாமே இப்படித்தான் இருக்கவேண்டுமென செய்துகொள்ளும் தீர்மானத்தினை, முடிச்செனக் கூறப்பட்டது.

தாமரை மலர் பகலில்தான் மலரும், இரவிலும், மதியொளியில் மூடிக்கொள்ளும்.

 

24.

சடங்குகளில் வல்ல அந்தணர்கள், இனிய சுரங்களோடு, நெருப்பினில் வேள்வி இயற்றுதலால், புகை சூழ்ந்த புண்ணிய இடங்களிலோ அல்லது பெருங் காடுகளிலோ,  வெள்ளைத் துணியினால் மூடப்பட்ட மண்டையோட்டுடன், வீடு வீடாகச் சென்று, பசியினால் வாடும் தனது வயிற்றுக் குழியினை நிரப்பவேண்டி, பிச்சையெடுக்கும் தன்மானமுள்ள மனிதன் மேலானவன். தனக்கு ஈடானோரிடையே நாளும் இழிவடைவது உகந்ததல்ல.

 

மண்டையோடு – பிச்சைப் பாத்திரம்

வெள்ளைத் துணியால் மூடப்பட்ட – இடப்பட்ட பிச்சையின் அளவை மறைப்பதற்காக, துணியால் மண்டையோட்டினை மூடுவரென கருத்து.

தன்மானமுள்ள மனிதன், நாளும் இழிவடைவதினும், துறவறம் மேற்கொள்வது உகந்ததென, ஆசிரியர் கருதுவதாகப் பொருள் கொள்ளலாம்.

 

25.

கங்கையின் அலைத் திவலைகளினால் குளிர்ந்த, வித்தியாதரர்கள் வசிக்கும் அழகிய பாறாங்கற்கள் நிறைந்த இமயமலைச் சாரல்கள் அழிந்துவிட்டனவா, அவச்சொற்களுடன் பிறரிடும் உணவில், மனிதர்கள் திளப்பதற்கு? 

 

வித்தியாதரர் – வானோரின் இசைக் கலைஞர்கள், இமயமலையில் கங்கை நதிக்கரையில் வசிப்பதாகக் கருதப்படுகின்றது.

அவச்சொற்களுடன் பிறரிடும் உணவில் உயிர் வாழ்வதினும், துறவறம் பூண்டு இமயமலைக்குச் செல்வது மேலெனப் பொருள்.

 

26.

மலைச் சாரல்களினின்று கிழங்குகள் மறைந்துவிட்டனவா? மலைகளினின்று நீரூற்றுக்கள் அழிந்துவிட்டனவா? இனிய சாறுநிறை பழங்களைத் தரும் மரங்களும், பட்டைகளைத் தரும் கிளைகளும் இல்லையா? தன்னடக்கம் சிறிதுமற்ற, வருந்தீட்டிய அற்ப செல்வம் படைத்த, தீயோர் முகத்தினில், காற்றினில் அசைந்தாடும் கொடிகளென, செருக்கினால் அசையும் புருவங்களைக் காண்கின்றனரே!

 

அசைந்தாடும் புருவங்கள் – திமிரினால் மனிதர்கள் உரையாடுகையில், அவர் புருவங்களின் போக்கினை வருணிக்கப்பட்டது.

உண்பதற்குக் கிழங்குகளும், நீராட ஓடைகளும், அணிந்திட மரப்பட்டைகளும் இருக்கையில், ஏன் தீயோரை அண்டிப் பிழைக்க வேண்டுமென பொருள்.

கிழங்குகள் – மூலிகைகளையும் குறிக்கும்.

தீயோரை அண்டிப் பிழைப்பதினும், துறவு பூணலாமென ஆசிரியர் கருதுகின்றார்.

 

27.

எழுந்திரு நண்பா! புனித கிழங்குகள் மற்றும், பழங்களை உணவாகவும், புதிய மரப்பட்டை விரித்தத் தரையினைப் படுக்கையாகவும், தயக்கமின்றி, மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு, இப்போதே காடு செல்வோம், வா. அங்கு, அற்ப, பகுத்தறிவற்ற, மூட உள்ளத்தோரில் தலையாயோரின், பணநோய் பீடித்த, அவலச் சொற்களும், அவர்தம் பெயரும் கூட, எப்போதும் கேட்காது.    

 

மரப்பட்டை – (உதிரந்த) இலைகளென்றும் பொருள் கொள்ளலாம்.

பணச் செருக்குடையோரிடம் இரப்பதினும், காட்டுக்குச் சென்று உயிர் பிழைக்கலாமென ஆசிரியர் கருதுகின்றார்.

 

28.

ஒவ்வொரு வனத்திலும், வேண்டியபோது, மரங்களினின்று எளிதாகப் பெறக்கூடிய பழங்களுண்டு. ஆங்காங்கே, புண்ணிய நதிகளின், குளிர்ந்த, இனிய நீருண்டு. தொடுவதற்கு மென்மையான, இளங்கொடிகளின் கிளைகளாலான படுக்கையுண்டு. ஆயினும்,  செல்வந்தரின் வாயிலில் நிற்கும் துன்பத்தினைப் பொறுத்திடுவோர் இரங்கத்தோரே!

 

29.

தியானத்தின் இடைவெளியில், மலை குகையில், பாறைப் படுக்கையில் படுத்துக் கொண்டு, செல்வந்தர்களிடம் முறையிட்டுத் திரிந்த அந்த துன்பமான நாட்களையும், இழிவு தரும் புலனிச்சைகளுக்கு உட்பட்ட, அந்த  நாட்களையும் எண்ணி, உள்ளுக்குள்ளேயே புன்னகைக்கின்றேன். 

 

தியானத்தின் இடைவெளியில், மலை குகையில், பாறைப் படுக்கையில் படுத்துக் கொண்டு, செல்வந்தர்களிடம் முறையிட்டுத் திரிவோரின், துன்பமான, நீண்ட நாட்களையும், இழிவு தரும் புலன் நுகர்ச்சிகளுக்கு உட்பட்டு நிறைவினை விழைவோரின், குறுகிய நாட்களையும் எண்ணி, உள்ளுக்குள்ளேயே புன்னகைக்கின்றேன்.

 

இந்தச் செய்யுளுக்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று, தியானம் செய்வோன், கடந்த காலத்தில் தான் எப்படி இருந்தோமென நினைவு கூர்ந்து,  புன்னகைப்பதாகவும். இரண்டு, இங்ஙனம் இரந்தும், இன்பம் துய்த்துக்கொண்டும் வாழும் மற்றோரைப் பற்றி எண்ணி, புன்னகைப்பதாகவும் கொள்ளலாம்.

நீண்ட, குறுகிய நாட்கள் – இரப்பவனுக்கு நாள் நீண்டதாகவும், துய்ப்பவனுக்கு நாள் குறுகியதாகவும் தோன்றுமெனப் பொருள்.

 

30.

எவ்வமயமும் நிறைவினில் திளைத்திருப்போரின் மகிழ்ச்சி அவர்களை விட்டு அகல்வதில்லை. ஆனால், செல்வத்தின் பேராசையிலே மூழ்கிய மற்றவர்களின் வேட்கையோ, என்றும் தீர்வதில்லை. எனவே, பிரமன், யாருக்கென்று மேருவின் அளவற்ற செல்வத்தினைப் படைத்திட்டான்? தன்னிலேயே முடிந்துபோகும் இத்தகைய பொன்னின் பெருமை எனக்குப் பிடிக்கவில்லை.

 

நிறைவினில் திளைத்திருப்போர் – ஆசைகளன்ற நிலையில் என்றும் குறையாத நிறைவினிலே உள்ள யோகியர்.

வேட்கை தீர்வதில்லை – மேருவின் பொன் அனைத்துமே வந்தடைந்தாலும், பேராசை கொண்டோரின் வேட்கை என்றும் தீரப்போவதில்லை.

எனவே அளப்பரிய மேரு மலையெனப்படும் பொன்மலையின் பொன் அனைத்தும் யாரை நிறைவு செய்யுமென்று ஆசிரியர் வியக்கின்றார். அதனால் தன்னிலேயே முடிந்துவிடும் செல்வத்தின் எண்ணம் ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை.

 

31.

பிச்சையெடுத்துண்ணல், எவ்வமயமும் இழிவில்லாதது, பயன் எதிர்பாராத  சுகமளிப்பது, அச்சம் தவிர்த்தது, தீய பொறாமை, அகந்தை, தற்பெருமை ஆகியவற்றை அழிப்பது, துன்பத்தினை ஒழிப்பது, எங்கும், என்றும், முயற்சியற்றது, எளிதானது, தூயது, நல்லோர் விரும்புவது, அனைவருக்கும் கிடைக்கப் பெறும் என்றும் வற்றாத செல்வமாம், சம்புவின் சத்திரம் என, தலை சிறந்த யோகியர்கள் போற்றுவர். 

 

சத்திரம் – வழிப்போக்கர்களுக்கு இலவச உணவும் இருப்பிடமும் வழங்குவதற்காக, முற்காலத்தில் நிறுவப்பட்டவை.

சத்திரம் என்ற சொல்லுக்கு பரம்பரை என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

பிச்சையெடுத்துண்ணல் – இது துறவறம் பூண்டவருக்கும், மறையோதும் மாணாக்கருக்கு மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்க்கை முறை. மற்றவர் இதனை உயிர் வாழ்வதற்காக மேற்கொள்வது இழிசெயல் என்பது நமது நாட்டவரின் கோட்பாடு.

 

32.

(புலன்) நுகர்ச்சிகளில் நோயின் அச்சம், நற்குலத்திற்கு வீழ்ச்சியின் அச்சம், செல்வத்திற்கு அரசனால் அச்சம், மானத்திற்கு இழிவின் அச்சம், வலிமைக்கு எதிரியின் அச்சம், அழகிய உருவினுக்கு முதுமையின் அச்சம், சாத்திர வல்லமைக்கு வாதத்தின் அச்சம், நற்குணங்களுக்கு தீயோரின் அச்சம், உடலுக்கு சாவின் அச்சம். அனைத்துப் பொருட்களோடும் அச்சமும் தொடரும். புவியில், மனிதருக்கு, வைராக்கியமொன்றே அச்சமற்றது.

 

அரசனால் பயம் – செல்வத்தினை தனது நாட்டின் அரசனோ அல்லது எதிரி நாட்டின் அரசனோ கவர்ந்துவிடுவான் என்ற அச்சம்.

வாதத்தின் அச்சம்வாதத்தில் தோல்வியின் அச்சம்

வைராக்கியம் – உலகப்பற்றறுத்த நிலை

 

33.

பிறப்பு, சாவினால் கவரப்பட்டுள்ளது; பொலிவு மிகு இளமை, முதுயினாலும், மகிழ்ச்சி, செல்வப் பேராசையினாலும், புலனடக்கத்தின் சுகம்,  ஒய்யார வனிதையரின் சரசங்களினாலும், நற்பண்புகள், உலகோரின் பொறாமையாலும், அடவிகள், அரவுகளினாலும், அரசன், தீயோராலும், வல்லமைகள், நிலையின்மையாலும் பீடிக்கப்பட்டுள்ளன. உலகில், கவரப்படாதது ஏதும் உளதோ? 

 

அரவுகளினால் – இரை தேடும் மிருகங்களினால் என்றும் கொள்ளலாம்.

 

34.

நூற்றுக் கணக்கான, உடல் மற்றும் மன நோய்களினால் மனிதரின் ஆரோக்கியம் பலவிதமாக அழிவடைகின்றது. செல்வம் எங்குளதோ அங்கு, கெடுதல்கள், கதவுகள் திறந்துள்ளது போலும், நுழைகின்றன. பிறப்பவை அனைத்தினையும், அவற்றின் விருப்பமின்றியே, சாவு விரைவிலேயே தன்வயப்படுத்திக்கொள்கின்றது. அதனால், அந்த, தடையேதுமற்ற படைப்பவன், என்றும் நிலைத்துள்ளதாக எதனைச் செய்தானென்று பகர்வாய்.

 

35.

(புலன்) நுகர்ச்சிகள், எழுந்து வீழும் அலைகள் போன்று, நிலையற்றவை. உயிர், நொடியில் அழிவது. இளமையின் இன்பங்கள், சில நாட்கள் மட்டுமே. (நமக்குப்) பிரியமானவரிடம் (நாம் வைக்கும்) அன்பு நிலையற்றது. அறிவுடைத்த ஆசான்களே! சமுசாரம் அனைத்தும் சாரமற்றதென அறிந்து, உலகோர் உய்வதற்கென, பேறு பெறுவதில், திறமையோடு மனம் செலுத்துவீரே.

 

பேறு பெறுதல் – சமாதி என்றும் பொருள் கொள்ளலாம்.  

 

36.

புலன் நுகர்ச்சிகள், மேகமூட்டத்திடை பளிச்சிடும் மின்னல் நிகர், நிலையற்றவை. ஆயுள், காற்றில் அடித்துச் செல்லப்படும், நீர்கொண்ட முகில்களில் போன்று நிலையற்றது. மனிதரின் இளமை ஆசைகள், நிலையற்றவை. அறிவுடையோரே! இதனைக் கடிதே உணர்ந்து, எளிதாக, சமாதி (நிலை) அடையத்தக்க, யோகத்தினில், துணிந்து, மனத்தினை இருத்துவீரே.   

 

நீர்கொண்ட முகில் – தாமரை இலை மீது நீரென்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

 

37.

வாழ்க்கை, பேரலை போன்று மாறக்கூடியது. இளமையின் எழில், சில நாட்களே நீடிப்பது. செல்வம், நொடியில் மாறும், எண்ணங்களைப் போன்றது. துய்க்கும் சுகங்களனைத்தும், எப்போதாவது வரும், இலையுதிர்கால மின்னல் நிகரானது. நமக்குப் பிரியமானவர்களின், கழுத்தைச் சுற்றிய அரவணைப்பும், நீண்ட காலம் நீடிப்பதில்லை. எனவே, அச்சமிகு, சமுசாரக் கடலினைக் கடப்பதற்கு, பரம்பொருளில் உள்ளம் திளைத்திருப்பாய்.

 

38.

(தாயின்) கருப்பையில் உறைகையில், மல, மூத்திரங்களிடையே, அறுதியிட்ட உடலோடு, மிக்குத் துயரடைகின்றாய். இளமையில், பெண்ணின் பிரிவுத் துயரின் கலக்கத்தினால், இன்பம் துய்க்க இயலாது வருந்துகின்றாய். முதுமையும், பெண்ணின் வெளிப்படையான ஏளனத்தினால், உகந்ததல்ல. ஏ மனிதா! வாழ்க்கையில் சிறிதேனும் இன்பம் உளதோவெனப் பகர்வாய்.

 

39.

முதுமை, பெண்புலியென அச்சமூட்டிக்கொன்டுள்ளது. நோய்கள், எதிரிகளென, உடலைத் தாக்கிக்கொண்டுள்ளன. ஆயுள், ஓட்டைக் குட நீரைப் போன்று கழிந்துகொண்டுள்ளது. ஆயினும், மனிதர்கள் தமக்கு ஒவ்வாதவாறே நடந்துகொள்கின்றனரென்பது, வேடிக்கையே.

 

பெண்புலி சீற்றம் மிகுந்தது எனப்படும்.

ஒவ்வாதவாறு – நாம் உய்வதற்கு எது நல்லதென உணராது.

 

 40.

இந்த வாழ்க்கை, நிலையற்றவையான, பலவிதமான புலன் நுகர்ச்சிகளினாலானதே. எனவே, உலகோரே! எதற்காக வீண் முயற்சிகள் செய்துகொண்டு திரிகின்றீர்? நூற்றுக் கணக்கான ஆசைகளும் தளைகளும், உள்ளத்தின் அமைதியைக்  குலைக்கின்றன. எமது சொற்களைக் கேட்பீரேயாகில், இச்சைகளைக் களைந்து, சமாதியில் நிலைத்துப் பரம்பொருளினை அடைவீரே.

இச்சைகளைக் களைந்து, சமாதியில் நிலைத்துப் பரம்பொருளினை அடைவீரே – இதற்கு, சமாதி நிலை அடைய, இறைப் பற்று (பக்தி) கொள்வீரே என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

 

41.

எங்கிருந்தால், பிரமன், இந்திரன் முதலாக அனைத்து கடவுளர்களும், புல்லுக்கு நிகராகத் தோன்றுவரோ, எதனைச் சுவைத்தபின், மூவுலக அரசாண்மையும் மற்ற பெருமைகளும், சுவையற்றதாகத் தோன்றுமோ, அஃது, அனைத்தும் கடந்த, என்றும் மறையாத, பரம்பொருளின் இன்பம் ஒன்றே. அது என்றும் வளர்வது. ஏ நல்வினையோரே! அதனைத் தவிர, நொடியில் அழியத்தக்க, மற்ற இன்பங்களில் திளைக்காதீர்.

 

42.

அந்த எழிலான நகரும், அந்தப் பேரரசனும், அவனைச் சூழ்ந்த சிற்றரசர்களும், அவனருகில் மந்திரி வல்லுனர்களும், அந்த சந்திர பிம்ப வதனத்தினரும், துள்ளும் அந்த இளவரசர்களின் கும்பலும், புகழ் பாடுவோரும், அவர்தம் பாக்களும் – இவை யாவும் எவர் வயப்பட்டு,. வெறும் நினைவுகளாகி நின்றனவோ, அந்தக் காலனை வணங்கினேன்.

 

அரசவை வருணிக்கப்பட்டுள்ளது.

காலன் – சிவனின் பெயர்களிலொன்று.

ஆசிரியர், துறவறம் பூண்டபின், தனது கடந்த கால வாழ்க்கையினை நினைவு கூர்வதாகத் தெரிகின்றது.

 

43.

எந்தவொரு வீட்டில் (சதுரங்கப் பலகையின் கட்டம்) பல (காய்கள்) இருந்தனவோ, அங்கு இப்போது ஒன்றுதான் மிஞ்சியுள்ளது. எங்கு ஒன்றோ அதன்பின்னர் பலவோ இருந்தன, அங்கு முடிவில் ஒன்றுகூட இல்லை. இங்ஙனம், பகலிரவெனும் இரண்டு (தாயக்) கட்டைகளை உருட்டி, காலனும் (அவன் மனைவி) காளியும், உலகெனும் சதுரங்கப் பலகையில், உயிர்களைக் காய்களாக்கி, விளையாடுகின்றனர்.

 

காலன் – சிவன்.

 

44.

ஒவ்வொரு நாளும் பகலவன் எழுந்து, மறைவதன் விளைவாக, வாழ்நாட்கள் குறுகிக்கொண்டுள்ளது. பற்பல காரியங்கள் மற்றும் கடமைகளின் மிகுந்த பளுவினால், நேரம் கழிவதும் தெரிவதில்லை. பிறப்பு, முதுமை, விபத்துக்கள், சாவு இவற்றினைக் கண்டும் அச்சம் உண்டாவதில்லை. மோகமெனும், மயக்கம் தரும் கள்ளினை அருந்தி, உலகு உன்மத்தமடைந்துள்ளது.

 

உன்மத்தம் – புலன் நுகர்ச்சிகள் மற்றும் பேராசைகளினால் உண்டாகும் வெறி நிகர் மருட்சி.

 

45.

இரவும் அதுவே, அதனைத் தொடரும் பகலும் அதுவே என்றறிந்தும், அறிவற்ற  உயிர்கள், தமது பழவினையினால் உந்தப்பட்டு, தத்தம் பணிகளுக்காக, விடாது, அதேவிதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. நாம் இவ்விதமாக, சமுசார மோகத்தினால்,  திரும்பத் திரும்ப, அதே காரியங்களிலும், நுகர்ச்சிகளிலும் ஏன், எதற்காக   ஈடுபடுகின்றோமென்றெண்ணி வெட்கப்படுவதில்லையே, ஐயகோ!

 

இரவும் அதுவே, பகலும் அதுவே – ஒவ்வொரு நாளும் அதேவிதமாகத் தோன்றுவதனால், நாமும் அங்ஙனமே என்றும் இளமை மாறாமல் இருப்போமென எண்ணி, ஆயுட்காலம் குறைவதுணராது, மனிதர்கள் ஏமாந்து போகின்றனர்.

பழவினை – நாம் செய்யும் வினைகளின் பயன், நம்மைப் பிறவிதோறும் தொடரும்.

 

46.

சமுசாரமெனும் சுழற்சியினைக் களைவதற்கு, முறைப்படி, ஆண்டவனின் திருவடிகளை தியானித்தோமில்லை வானுலகத்தின் வாசற்கதவினைத் திறம்படத் திறப்பதற்காக, தருமங்களையும் சேகரித்தோமில்லை. பெண்களின் இரு திரண்ட மார்பகங்களையும், உருண்ட தொடைகளையும், கனவிலும் அணைத்தோமில்லை. தாயாரின் இளமைப் பருவத்தினை அழித்திடும் வெறும் கோடரியாகினோமே யாம்!

 

பொதுவாக, மனிதருக்கு, வாழ்க்கையில் மூன்று குறிக்கோள்கள் உண்டு – முதலாவது, இறைவனை முறைப்படி வழிபட்டு, முக்தி பெறுதல், அது இயலாவிடில் கருமங்கள் இயற்றி, தருமம் ஈட்டி, வானுலகம் செல்லல், அதுவும் தவறினால், உலக இன்பங்களையாவது துய்த்தல். இதில் எதையும் சாதிக்க இயலாவிடில், மனிதப் பிறவி  வீணே – அத்தகையவன் பிறவாதிருந்தால், அவன் தாயாரின் இளமையாவது மிஞ்சியிருக்குமென ஆசிரியர் கருதுகின்றார்.

 

47.

அடக்கம் தரும் கல்வியினை, முறையாகப் பயின்றோமில்லை, புவியில் (அத்தகைய கல்வியினால்) வாதிடுவோர்களை வெல்வதறிந்தோமில்லை. கத்தி முனையினால் (போரில்) யானையின் மண்டையைப் பிளந்து, வானுயர் புகழும் ஈட்டினோமில்லை. நிலவொளியில், மங்கையின், மென்மையான அரும்பு இதழ்களின் அமுதமும் உண்டோமில்லை. ஆளில்லா வீட்டில் விளக்கென, இளமை வீணாகக் கழிந்ததே, அந்தோ!

 

முறையாகப் பயின்ற கல்வி, அடக்கம் தருவது. அதனை வாதிடுவதற்காக மட்டும் பயன்படுத்துவர் தீயோர்.

வானுயர் புகழ் – இதனை வானுலகம் செல்வதற்குரிய புகழென்றும் கொள்ளலாம்.

வாழ்க்கையின் மூன்று குறிக்கோள்களான, கல்வி, வீரம், காதல் – இவற்றில் எதையும் சாதிக்காதவனின் வாழ்க்கை வீணே எனப் பொருள்.  

 

48.

களங்கமற்ற கல்வி கற்றோமில்லை. செல்வம் ஈட்டினோமில்லை. பெற்றோருக்குச்  சேவையும், அக்கறை கொண்ட உள்ளத்தோடு செய்தோமில்லை. நர்த்தமிடும்  கண்களையுடைய இளம்பெண்களை, கனவிலும் அணைத்தோமில்லை.  காக்கைகளைப் போன்று, பிறரிடும் உணவினை விழைந்தே இவ்வாழ்வினைக் கழித்தோமே!

 

இந்த மூன்று செய்யுள்களிலும் ஆசிரியர் தன்னைப் பற்றியோ அல்லது தன்னைப்போல் வைராக்கியத்தினை (பற்றின்மையை) விழைவோரைப் பற்றியல்லாது, உலகில் சோம்பித்திரியும் பலரைப் பற்றி, கருத்து தெரிவித்துள்ளார் எனலாம். இங்ஙனம், வாழ்க்கையில் ஏதுமே சாதிக்கத் தெரியாமல் அல்லது சாதிக்க இயலாமல், நேரே வைராக்கியத்தினை அடைய எண்ணுவோர் வெறும் போலிகளாகத்தான் இருப்பர். வாழ்க்கையில் வெற்றி கண்ட பின்னர் விழையும் வைராக்கியமே உண்மையானது; அதுதான் பயன் தரும். ஏனெனில், உள்ளதைத் துறப்பது தான் துறவு. இல்லாததை யாரும் துறக்க இயலாது.

 

49.

யாம் எவரிடமிருந்து பிறந்தோமே, அவர்கள் முன்னமேயே காலமாகிவிட்டனர். எமக்கு ஈடாக வளர்ந்தோரும் நினைவாகிப் போயினர். யாமும், இங்கு, நதியின் மணல் கரைகளிடை, மரங்களைப் போன்று, நாளுக்கு நாள், முடிவினை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம்.

 

நதியின் மணல் கரையில் மரங்கள் வேரூன்ற இயலாது, பட்டுப் போகும்.  .

 

50,

மனிதரின் ஆயுட்காலம் நூறாண்டுகளென வரையறுக்கப்பட்டுள்ளது. அதனில், பகுதி, இரவில் கழிகின்றது. மற்றொரு பகுதியில், ஒரு பகுதி சிறுமைப் பருவத்திலும், மற்றொரு பகுதி முதுமைப் பருவத்திலும் கழிகின்றது. மிகுதியுள்ளது, நோய் மற்றும் பிரிவுத் துயர்கள் கூடிய அடிமைத் தனம் ஆகியவற்றில் கழிகின்றது. நிலையற்ற, நீரலைகள் நிகர் வாழ்க்கையில், உயிர்களுக்கு ஏது சுகம்? 

 

முழு ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என்றால், 50 ஆண்டுகள் இரவில் கழிகின்றது. மிகுதியுள்ளதைப்  பகுதியிட்டால், சிறுமை மற்றும் முதுமைப் பருவம் ஒவ்வொன்றும் பன்னிரண்டரை ஆண்டுகளாகும். ஆனால் இதனில், இரவு கணக்கில் சேராதாகையால், பன்னிரண்டரை என்பது 25 (பகலிரவு கலந்த) ஆண்டுகளுக்கு நிகராகும். சிறுமைப் பருவம் என்பது திருமணத்திற்கு முந்தைய பகுதி – அதாவது முதல் 25 ஆண்டுகள். முதுமைப் பருவம், கடைசி 25 ஆண்டுகள். இடைப்பட்ட பகுதியான 50 (பகலிரவு கலந்த) ஆண்டுகள் அடிமைத் தனத்தில் கழிகின்றது என்கின்றார் ஆசிரியர்.

ஆனால் இன்று மனிதனின் ஆயுட்காலம், எண்பதாக உள்ள நிலையிலும், சிறுமைப் பருவம் 25 ஆண்டுகளேயாகும். முதுமைப் பருவம் 20 ஆண்டுகள் என்றால், மிகுதியுள்ள சேவைக் காலம் 35 ஆண்டுகளாகும். இன்று அரசு பதவிகளில், பொதுவாக, ஓய்வு 60-வது வயதினில் என்பது குறிப்பிடத்தக்கது.

 

51.

ஒரு நொடி சிறுவனாக, இன்னொரு நொடி காம இச்சைகளில் திளைக்கும் இளைஞனாக, ஒரு நொடி ஏழையாக, இன்னொரு நொடி அனைத்துச் செழிப்புகளும் நிறைந்தவனாக இருந்துவிட்டு, வாழ்க்கையெனும் நாடகத்தின் முடிவில், மனிதன், ஒரு நடிகனைப் போன்று, முதுமையினால் தளர்ந்த அங்கங்களும், சுருக்கங்கள் நிறைந்த உடலுமாக, எமனின் நகரெனும், திரைக்குப் பின்னால் நுழைகின்றான். 

 

ஒரு நொடி – சிறிது நேரம் என்று பொருள் கொள்ளவேண்டும்.

 

52.

ஓர் அரசனோடு, துறவியின் உரையாடல்  

நீ அரசனென்றால், யாம், எமது ஆசானைப் பணிந்து, மெய்யறிவு பெற்ற பெருமையுடையோம். நீ செழிப்பினில் பெயர் பெற்றவனென்றால், எமது புகழும் கற்றோரால் நாற்றிசையிலும் போற்றப் பெற்றது. பகைவரை ஒறுப்போனே, இங்ஙனம் நம்மிருவரிடையே வேறுபாடு மிக்கு அதிகமில்லை. நீ எம்மை புறக்கணிப்பாயாகில், எமக்கும் உன்னிடம் முற்றிலும் அக்கறையில்லை. 

 

மெய்யறிவு – பிரஞ்ஞா அல்லது பிரஞ்ஞானம் எனப்படுவது (consciousness)

உன்னிடம் முற்றிலும் அக்கறையில்லைஉன்னிடமிருந்து ஏதும் வேண்டியதில்லை என்று பொருள்.

 

53.

(அரசே!) நீ பொருட்களுக்கு அதிபதியானால், யாமும், அனைத்துப் பொருட்களிலும், சொற்களுக்கு அதிபதியாவோம். நீ சூரனென்றால், யாம் வாதிடுவோரின் செருக்கினை அடக்குவதில் குன்றாத திறமை பெற்றவராவோம். உன்னை செல்வந்தர்கள் அடிபணிவரெனின், எம்மையும், தமது உள்ளத்தின் அழுக்கினைக் களைய வேண்டி, செவிமடுக்க விரும்புவர் (பலர்). எம்மிடம் உமக்கு மதிப்பு இல்லையாகில், எமக்கும் உன்னிடம் மதிப்பு கொஞ்சமும் இல்லை. அரசே, யாம் ஏகினோம்.

 

பொருட்கள் – செல்வம் மற்றும் உட்கருத்து என்ற இரு பொருட்களிலும் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  

சொற்களுக்கு அதிபதி – நூல்களில் கூறப்பட்ட எண்ணங்களைப் பொருளுணர்ந்து உரைப்பதில் வல்லமை பெற்றவரெனப் பொருள்.

 

54.

(அரசே!) இங்கு யாம் மரவுரியும், அங்கு நீ நல்லாடையும் அணிந்து மகிழ்ந்துள்ளோம். மகிழ்ச்சி இருவருக்குமே ஒன்றுதான், இதில் வேறுபாடேதும் பெரிதில்லை. எவனுடைய வேட்கை அதிகமாகவுளதோ, அவனே வறியவனாவான். உள்ளத்தினில் நிறைவுண்டாகில், செல்வந்தன் யார்? வறியவன் யார்?

 

மரவுரி – மரத்தின் பட்டையினாலானது. மற்ற ஆடைகளும் மரம் அல்லது செடிகளினின்றும் பெறப்பட்ட நாரினால் நெய்யப்பட்டது. எனவே இரண்டுக்கும் பெரிய வேறுபாடில்லை. பட்டாடை பட்டுப்பூச்சியைக் கொன்று நெய்யப்பட்டதால், இன்னும் கீழானது.

உள்ளத்தின் நிறைவுண்டாகில், செல்வம் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்று பொருள்.

 

55.

உண்பதற்குப் பழங்களும், அருந்துவதற்கு இனிய நீரும், படுக்கைக்கு வெறும் தரையும், உடுப்பதற்கு மரவுரியும் போதும். புதிதாகப் பெற்ற செல்வமெனும் கள்ளருந்தி, புலன்களனைத்தும் போதையுற்ற, அடக்கமற்றத் தீயோரைப் பொறுக்க யாம் விரும்பவில்லை.

 

அடக்கமற்ற தீயோரென யாரை ஆசிரியர் குறிப்பிடுகின்றாரென விளங்கவில்லை. அவர் தனது புலன்களை நோக்கித் தீயோரெனக் கூறுகின்றாரோ?. மனிதன், துறவு நிலையில், அடவியிலிருந்தாலும், அவனுடைய மனமும் புலன்களும், தமது தீமையான விழைவுகளை அத்தனை எளிதில் துறந்துவிடாது. அதனால்தான், நம் முன்னோர் படிப்படியாக துறவு நிலை எய்தவேண்டுமென கூறினர். புலன்களின் விழைவுகளைக் கடவாது அல்லது வெல்லாது, அவற்றினை பலவந்தமாக அடக்கி துறவு மேற்கொண்டால், அவை துறவு நிலையிலும் தலைதூக்கத்தான் செய்யும். இத்தகைய தீமையைத்தான் ஆசிரியர் கண்டிக்கின்றாரெனக் கருதுகின்றேன்.

 

56.

பிச்சையெடுத்துண்போம் யாம், நாற்றிசைகளே ஆடையாக அணிவோம், புவித் தரையே படுக்கையாகக் கொள்வோம். பெரிய மனிதர்களிடம் நமக்கென்ன வேலை?

 

நாற்றிசைகளே ஆடையாக – நிருவாணம் எனப்படும். அவதூத சன்னியாசிகள் ஆடையுடுக்கமாட்டார்கள். சமண சன்னியாசிகளும் அங்ஙனமே.

 

57.

யாம் நடிகரோ, விகடகவியோ, இசைஞரோ, பிறருக்கு துரோகம் செய்யும் எண்ணமுள்ளவரோ அல்லது பருத்த மார்பகங்களினால் குனிந்த கணிகையரோ அல்லோம். பின்னர், அரசரிடம் எமக்கு என்ன வேலை?

 

இச்செய்யுள், அரசவையினைக் குறிப்பதாகத் தோன்றுகின்றது. எனவே பிறருக்கு துரோகம் செய்வோரைக் குறித்துக் கூறுவது ராஜ தந்திரிகளைப் பற்றி இருக்கலாம். அல்லது, செய்யுளின் வேறுபாடாகவுள்ள வாதிடுவதில் திறமையுள்ளவர் என்பது சரியாக இருக்கலாம். ஆயினும் இந்த செய்யுளும், இதற்கு முந்தைய செய்யுளும் ஆசிரியருடையவா என்று ஐயம் கொள்ளத் தோன்றுகின்றது.

 

58.

முன்னம், பரந்த உள்ளம் கொண்ட பெருந்தகையர் சிலரால் (பிரமன் மற்றும் பிரஜாபதிகள்) இவ்வுலகம் படைக்கப்பட்டது. மற்றவரால் (விஷ்ணு) இது காக்கப்பட்டது. பிறரால் (பரசுராமர்) இது வெல்லப்பட்டு, மற்றவருக்கு, புல்லுக்கு நிகரென, அளிக்கப்பட்டது. இன்னுமிங்கு,  பல தீரர்கள் (பலி சக்கிரவர்த்தி போன்றோர்) பதினான்கு புவனங்களையும் அனுபவிக்கின்றனர். ஆகவே, சில நகரங்களையே ஆளும் மனிதருக்கு, ஏனிந்த செருக்குக் காய்ச்சல்?

 

முன்னம் இவ்வுலகினை படைத்துக் காத்து, ஆட்சி செய்தவர்கள், சில நகர்களையே ஆளும், மன்னர்களைப் போன்று, செருக்குடைத்தவரல்லர்.

 

59.

(இதற்குமுன்) நொடியேனும் இப்புவி, நுற்றுக்கணக்கான மன்னர்களால் ஆளப்படாமல் இருக்கவில்லை. எனவே, அத்தகையை புவியினை அடைவதனால், புவியாள்வோருக்கு என்ன பெருமை இருக்கும்? இதனின் (புவியின்) சிறு பகுதியினுக்கும் பகுதியின் ஒரு சிறு துண்டினையடைந்து, துயரப்படுவதற்கு பதிலாக, இம்முட்டாள்கள் மகிழ்ச்சியடைகின்றனரே!

 

இப்புவியினை ஆண்ட பலி சக்கிரவர்த்தி, வாமனருக்கு அதனை தாரை வார்த்துக் கொடுத்தார். வாமனார் புவியினை தனது காலின் ஒரடியால் அளந்தார். அஃதன்றி, இப்புவியினை ஆயிரக்கணக்கானோர் முன்னமே ஆண்டு, மடிந்தபின், இது உண்ட மிச்சத்திற்கு நிகராகுமென ஆசிரியர் கருதுகின்றார்.

 

60.

நீரினால் சூழப்பட்ட (இந்தப்) புவி ஒரு மண்ணுருண்டையே. அது (புவி) முழுவதுமே (இந்தப் பேரண்டத்தின்) ஒரு அணுவுக்கும் நிகராகாது. (இந்தப் புவியினை,) நூற்றுக்கணக்கான போர்களின் விளைவாக, அரசர்கள் தாமே துண்டுகளாக்கி, அந்தத் துண்டுகளை அனுபவித்து வருகின்றனர். இந்த இழிந்த, மிக்கு வறியவர்களான அரசர்கள், கேட்டால் கொடுப்பதில்லை, கொடுத்தாலும் மிகுச் சிறிதே கொடுப்பர். அவர்களிடம் (அரசர்களிடம்) பணக்காசினை இரக்கும், மனிதரில் இழிந்தோர், கேடுகெட்டோரே.

 

மிக்கு வறியவர்கள் – இது இகழ்ச்சிச் சொல்லாகும்.

 

61.

காமனை எரித்தவனின் (சிவனின்) தலையுச்சியில், எவனுடைய வெள்ளை மண்டையோடு அணிகலனாகத் திகழ்கின்றதோ, அவன் ஒருவனே பிறந்தவன் (பிறவிப் பயனை அடைந்தவன்) ஆவான். ஆனால், இன்றோ, தமது உயிரைக் காப்பாற்றும் எண்ணம் கொண்ட சிலர், செருக்கெனும் மிகு மோசமான காய்ச்சல் கொண்ட, பிற மனிதர்களிடம் இரந்து நிற்பதேனோ?

 

மனிதன், தாயின் கருப்பையில் இருக்கையில், சிவன், பிரம்ம ரந்திரம் எனப்படும் தலையுச்சித் துளை வழியாக, உயிராக உள்ளே நுழைவதாகவும், அம்மனிதன் பிறவிப் பயனெனப்படும் மோக்கமடைந்தால், அவன் உயிர், அதே துளை வழியாக வெளியேறுவதாகவும், அவனுடைய மண்டையோட்டினை சிவன் தலையில் அணிவதாகவும் கருதப்படும். கபாலி வேடத்தில், சிவனின் மண்டையோட்டு மாலையும், இதனையே குறிப்பதாகக் கூறப்படும். பிரமனின் ஒரு தலையை சிவன் கொய்தபின், அதனையே தலையில் அணிவதாகவும் கூறப்படும்.

மனிதர்கள், பிறவிப்பயனை அடைய முயற்சிக்காமல், தமது உயிரைக் காப்பதற்காக, ஈனர்களிடம் இரந்து நிற்கின்றனரே என்பது கருத்து.

 

62.

உன்னுள்ளேயே, தானாகவே தோன்றும், சிந்தாமணித் தன்மை (மன நிறைவு) இருக்கையில், எதனை அடைய வேண்டி, பிறரின் உள்ளத்தினை மகிழ்வித்து, நாளும் மிக்கு மன உளைச்சல் அடைகின்றாய், ஐயகோ? கோரிக்கைகளைத் துறந்தால், உன்னுடைய எந்த வேண்டுதல் நிறைவேறாது?

 

சிந்தாமணி – வேண்டியதருளும் மணி.

சிந்தாமணித் தன்மையென ஆசிரியர் குறிப்பிடுவது மன நிறைவினை. அனைத்து கோரிக்கைகளையும் துறந்தால், தானாகவே தோன்றுவது, மன நிறைவு. எனவே, கோரிக்கைகளுக்காக எவரையும், எதற்காக வேண்டி, மன உளைச்சல் அடையவேண்டுமென, தனது மனதையே, கேட்டுக்கொள்கின்றார், ஆசிரியர்.  கோரிக்கைகளைத் துறந்தபின், எஞ்சி நிற்பது, பிறவிப் பயனை (மோக்கம்) அடைதல் ஒன்றே. அத்தகைய கோரிக்கைகளற்றவன், உலகோரின் நலனுக்காக, எதனை வேண்டினாலும் அது சிந்தாமணியென நிறைவேறும் என்பது பொருள். இதனை கீதையில் satya saMkalpa என்று கூறப்படும்.

 

63.

ஏ மனமே! வீணாக ஏன் அலைகின்றாய்? எங்காவது இளைப்பாறுவாய். எது, தானாக எப்படி நடக்கின்றதோ, அது அப்படியேதான் நடக்கும், வேறாகவல்ல. கடந்ததையும் நினைக்காமல், வருவதையும் கற்பனை செய்யாமல், வருவதையும், போவதையும் பற்றி ஆலோசிக்காமல், இங்கு கிடைத்ததை அனுபவிப்பாய்.

 

கிடைத்ததை அனுபவிப்பாய் – வேண்டுதல் வேண்டாமை இல்லாத, பற்றறுத்த நிலையில் இருக்க, தன் மனதினை ஆசிரியர் வேண்டுகின்றார்.

 

64.

ஏ மனமே! அதனால், (முந்தைய செய்யுளில் கூறியது) (உடல்) தளர்வுறச் செய்யும், புலன் நுகர்ச்சிகளெனும், வலையில் வீழாதே. துயரங்களனைத்தினையும், நொடியில் களையவல்ல (மறைகள் உறைக்கும்) உன்னதமான பாதையினில் புகலடைவாய்.  நிலையற்ற அலைகள் நிகர், உனது போக்கினைக் கைவிட்டு, சாந்த நிலையினை அடைவாய். அநித்திய, உலக இன்பங்களை, இனியும் துய்க்காதே. இப்போது அமைதி கொள்வாய்.

சாந்தம் - திருமூலர் (திருமந்திரத்தில்) வருணிக்கும் உபசாந்தம் எனப்படும் பேரமைதி நிலை.  

 

 

65.

ஏ மனமே! மோகத்தினைத் துறப்பாய். பிறையணிவோனிடம் (சிவன்) பற்று கொள்வாய். வானுலக நதியின் (கங்கை) கரையினில் உறையத் துணிவாய். அலைகளையும், நீர்க்குமிழியினையும், மின்னற் கொடியினையும், பெண்ணையும், தீச்சுடரினையும், அரவத்தினையும், நீரின் வேகத்தினையும் யார் நம்ப இயலும்

 

மோகம் – உலகப்பற்றுகளில் அளவற்ற ஈடுபாடு.

பெண் – செல்வம் என வேறுபாடு உளது.

அலைகள், நீர்க்குமிழி, மின்னற்கொடி ஆகியவை போன்று உலக வாழ்க்கையும் நிலையற்றதும், நொடியில் தோன்றி மறைவதுமாகும். எனவே நம்பத்தக்கதல்ல.

 

66.

ஏ மனமே! புவியாள்வோரின் புருவ அசைவுக்கு உகந்தாற்போல் ஆடும், விலைமகளைப் போன்ற, நிலையற்ற, இந்த செல்வமகளை, ஒருபோதும் விழைந்து நிற்காதே. கந்தலுடுத்தி, வாரணாசி (காசி) தெரு வீதிகளின் வீட்டு வாயில்களுள் நுழைந்து, கையெனும் பாத்திரத்தில் இடப்படும் பிச்சைக்காகக் காத்திருக்கின்றோம், யாம்.

 

67.

ஏ மனமே! முன்னால் இசை, பக்கத்தில் தெற்கினின்றும் இனிய கவிஞர்கள், பின்னால், குலுங்கும் வளையலோசை ஒலிக்கும் கைகளில் சாமரம் ஏந்திய பெண்டிர் – இங்ஙனம் உளதாகில், உலக இன்பங்களைத் துய்ப்பவனாக இரு. அன்றேல், துணிந்து நிருவிகல்ப சமாதியில் புகுவாய்.

 

தெற்கினின்றும் – தென்னிந்தியக் கவிஞர்கள் சிறந்தவரென கருத்து.

நிருவிகல்ப சமாதி – பரம்பொருளுடன் ஒன்றுதல்.

இல்லாத ஒன்றினைக் கற்பனை செய்து ஏமாந்து போகாதே. என்றும் குன்றாத சமாதி நிலை எய்துவாயென ஆசிரியர் தனது மனதிற்கு உரைக்கின்றார்.

 

68.

அனைத்து இச்சைகளையும் அளிக்கவல்ல, செல்வத்தினை அடைந்தாலென்ன? எதிரிகளின் தலையில் தனது கால்களை வைத்தால்தானென்ன? நமக்கு வேண்டியவருக்கு, பெருமைகளை அளித்தால்தானென்ன?  (அல்லது நமது செல்வத்தினால், வேண்டியவர்களைப் அடைந்தால்தானென்ன?) உடலெடுத்தோரின் உடல்கள், கல்ப இறுதிவரை நீடித்தாலும்தானென்ன?

 

எதிரியின் தலையில் கால்களை வைத்தல் – எதிரிகளை அடக்குதல்

கல்பம் – உலகைப் படைத்த பிரமனின் ஆயுட்காலம். ஒவ்வொரு கல்பத்திற்கும் ஒரு பிரமன் எனப்படும்.

 

69.

சிவனிடத்தில் பக்தி, உள்ளத்தில் இறப்பு, பிறப்பின் அச்சம், சுற்றத்தாரிடம் பற்றின்மை, காம எண்ணங்கள் இல்லாமை, (உலகோரிடம்) தொடர்பெனும் குற்றம் நேராத, மக்கள் நடமாட்டமில்லாத காடு, (உள்ளத்தில்) வைராக்கியம் (பற்றறுத்த நிலை) – இவையெல்லாம் உண்டாகில், இதனினும் மேலானது என்ன வேண்டும்?

 

இறப்பு, பிறப்பின் அச்சம் – இந்த அச்சம் உண்டானால்தான், பிறவிப் பயனை அடையும் பயணம் தொடங்க வாய்ப்புண்டு.

 

70.

ஆதலால் (முந்தைய செய்யுளில் கூறியது) அந்த முடிவற்ற, தேய்வற்ற, யாவற்றிலும் ஒளிரும் பரம்பொருளினை சிந்திப்பாய் - எதனை அடையப் பெற்றால், உலகோர் பெரிதாகக் கருதும், இப்புவியாட்சி முதலான அனைத்து அற்ப இன்பங்களும், பின் தொடருமன்றோ! உண்மைக்குப் புறம்பான பிற எண்ணங்களெதற்கு? 

 

71.

ஏ மனமே! நிலையில்லாமல், (ஒரு நொடி) பாதாளம் புகுவாய், (மறு நொடி) நாற்றிசைகளையும் கடந்து, வானில் பறந்து திரிவாய். தவறியும் கூட, உன்னை (சமுசாரச் சுழலினின்றும்) கடத்துவித்து, (உனக்கு) நன்மை சேர்க்கும், உனது உண்மையான தன்மையதான, தூய பரம்பொருளினை சிந்திக்க மறந்தனையே?

 

பாதாளம் புகுவாய், வானில் பறப்பாய் – மனத்தில், எவ்வமயமும், ஒன்றன்பின் ஒன்றாக, எழுந்துகொண்டிருக்கும் எண்ணங்களின் நிலையற்ற தன்மை.

உனது உண்மையான தன்மை – ஆன்மாவைக் குறிக்கும்.

 

72.

மறைகளினாலென்ன? நீதி நுல்களினாலென்ன? புராணங்கள் வாசிப்பதாலென்ன? மிக்கு விரிவான, சாத்திரங்களாலென்ன? வானுலகமெனும் கிராமக் குடில் வாழ்க்கைப் பயன் தரவல்ல, கருமச் சடங்குச் சுழல்களினாலென்ன? முத்தியொன்றே உலக வாழ்க்கைத் தளையெனும் துன்ப நிலையினை அழிக்கவல்ல ஊழித்தீயாகும். அதுவே, தனது ஆன்மா, ஆனந்த நிலை எய்த வழியாகும். மற்றவையெல்லாம் வெறும் வணிக நோக்கங்களே.

 

மறைகள் – மறையோதல் - சடங்குகளை விவரிக்கும் மறைகளின் கரும காண்டத்தைக் குறிக்கும். உபநிடதங்கள் எனப்படும் ஞான காண்டம் இதில் சேராது.

வானுலகமெனும் கிராமக் குடில் வாழ்க்கை – மிக்கு முயன்று இயற்றும் கருமச் சடங்குகளின் பயனின் இழிநிலையை ஆசிரியர் வருணிக்கின்றார். இந்தச் சடங்குகள் நதியின் சுழல்கள் போன்றது. அதனில் சிக்கிக்கொண்டால் மீள இயலாதென பொருள்.

ஆனந்த நிலை – தன்னையறிதலின் பேரின்பம்.

வணிக நோக்கம் – பண்டமாற்று.

 

73.

புகழ்பெற்ற பொன்மலையும் (மேரு), ஊழித்தீயில் அழிவடைய, நிறைய திமிங்கிலங்களும், சுறாக்களும் உறையும், கடலும் வற்றிப்போக, மலைகளின் கால்களினால் தாங்கப்பட்டும், புவி முடிவடைய, இளம் யானையின், காது நுனி நிகர், நிலையற்ற, உடலைப் பற்றி பேச்சும் ஏன்?

 

மலைகளின் கால்கள் – புவியினை, மலைகள் தாங்குவதாக, முன்னம் கருதினர். 

யானையின் காது நுனி – யானையின் காதுகள் எப்போதும் ஆடிக்கொண்டேயிருக்கும்.

உடலைப் பற்றி பேச்சும் ஏன் – மேரு, கடல் மற்றும் புவியை ஒப்பிடுகையில் மனிதனின் உடல் எம்மாத்திரம் என்று பொருள்.

 

74.

உடல் சுருங்குகின்றது, நடை தடுமாறுகின்றது, பற்கள் விழுகின்றன, பார்வை மங்குகின்றது, செவிட்டுத்தனம் மிகுகின்றது, வாயினின்றும் எச்சில் வழிகின்றது, உறவினர்கள் நமது சொற்களை மதிப்பதில்லை, மனைவி பணிவிடை செய்வதில்லை. ஐயகோ, மனிதனின் முதுமை, எத்தகை கடினமானது! ஈன்ற மக்களும் எதிரிகளாகினரே!

 

75.

மனிதனுக்கு, முதுமையின் வருகையினால், தலையில் முடி நரைத்திருக்கக் கண்டு, எலும்புத்துண்டுகளால் அலங்கரிக்கப்பெற்ற, சண்டாளர் கிணற்றினைக் கண்டவரைப்  போன்று, இளம் பெண்டிர், தூர விலகினரே!

 

சண்டாளர் கிணறு – அவர்கள் உபயோகிக்கும் கிணறு எலும்புத் துண்டுகளினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது.

 

76.

எதுவரையில் இந்த உடம்பு நோய்களற்று, நலமாக இருக்கின்றதோ, எதுவரை முதுமை நெருங்கவில்லையோ, எதுவரை புலன்கள் தமது ஆற்றலை இழக்கவில்லையோ, எதுவரை ஆயுட்காலம் குன்றவில்லையோ, அதுவரைக்கும் மட்டுமே, அறிவாளி, தனது ஆன்ம மேன்மையினுக்காகப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ள இயலும்.  வீடு தீப்பற்றி எரியும்போது, கிணறு தோண்டத் தொடங்குவதனால், என்ன பயன்?

 

அதுவரைக்கும் மட்டுமே – ஆன்ம மேன்மைக்கான முயற்சிகளை தள்ளிப்போடுதல் கூடாது என்பது பொருள். கிழத்தனத்தை, வீடு தீப்பற்றி எரியும்போது என்ற உவமையினால் சுட்டிக்காட்டப்பட்டது.

 

 

77.

வானோர் நதி (கங்கை) கரையில் வசித்துக்கொண்டு தவமியற்றவா? அல்லது, பண்புள்ள மனைவியுடன், பரிவோடு, இல்வாழ்க்கை நடத்தவா? அல்லது அனைத்து சாத்திரங்கள் மற்றும் பற்பல காவியங்களின் (இராமாயணம் முதலானவை) அமுதச் சாறு பருகவா? சில கண்சிமிட்டு நேரமேயாகும், மனித ஆயுட்காலத்தில், என்ன செய்வதென்று அறிந்திலோம். 

 

புருஷார்த்தங்கள் (மனிதனின் வாழ்க்கைக் குறிக்கோட்கள்) நால்வகை (நான்கு படிகள்) எனப்படும் – அறம், பொருள், இன்பம், வீடு. வீடு, மனிதனின் பிறவிப்பயனை அடைதலாகும். மனிதரின் உள்ளத்தில், தமது வாழ்க்கைக் குறிக்கோள் மற்றும் நடத்தை குறித்து உண்டாகும் ஐயங்களையே ஆசிரியர் விவரிக்கின்றார்.   .

,

78.

குதிரையைப் போன்று, நிலையற்ற உள்ளத்தினரான, இந்த புவியாள்வோரை மகிழ்விக்க இயலாது. எமதுள்ளமோ, பெரும் பதவியில் (அல்லது பெரும் பயனில்) மிக்கு விருப்பம் கொண்டுள்ளது. உடல் முதுமையுற்றால், இந்த இனிய வாழ்வினை, சாவு கவர்ந்து சென்றுவிடும். எனவே, ஏ நண்பா (மனத்தை நோக்கி)! அறிவாளிக்கு, இவ்வுலகத்தில், தவத்தினும் மேலானது எதுவுமில்லை.

 

பெரும் பயனிலும், பதவியிலும் நோக்கம் கொண்டவன், மன்னர்களை மகிழ்வித்து அவற்றை அடைய இயலாது. ஆயுள் கழிந்தகொண்டே போவதினால், இந்த ஆசைகளை விடுத்து, தவமியற்றல் மேலாகும் என ஆசிரியர் கருதுகின்றார்.

 

79.

கண்ணியம் குன்ற, செல்வம் வற்ற, இரத்தல் பயனற்றுப்போக, உறவு அழிய, சுற்றம் ஏக, இளமை மெல்ல குன்ற, அறிவுள்ளவனுக்கு, கங்கை நீரால் புனிதமுற்ற, இமயமலைப் பள்ளத்தாக்கில், வனம் சூழ்ந்த குகைகளில், எங்காவது வசிப்பதொன்றே உகந்ததாகும்.

 

இங்கு குறிப்பிட்டவையெல்லாம் நிகழுமுன்பே, அறிவாளி தனக்குகந்ததைச் செய்யவேண்டுமெனப் பொருள்.

 

80.

இனிமை, மதியின் ஒளிக்கதிர்கள். இனிமை புல் நிறை வனப்பகுதி. இனிமை நல்லோர் மற்றும் நண்பர் குழுமத்தின் சுகம். காவியக் கதைகள் இனிமை. (ஊடற் பிணக்கில்) சினத்தினால், கண்ணீர் ததும்பும், காதலியின் முகம் இனிமை. யாவும் இனிமையே. ஆயின், இவற்றின் நிலையின்மையினை உள்ளம் உணர்ந்தபின், ஏதும் இனிமை இல்லையே.

 

காவியக் கதைகள் – இராமாயணம் போன்றவை.

 

81.

வசிப்பதற்கு மாடமாளிகை இனிமையல்லவோ? கேட்பதற்கு இன்னிசை இனிமையல்லவோ? உயிருக்கு நிகரானோர் (பெண்டிர்) கலவி, அனைத்தினும் மிக்கு விரும்பத்தக்கதல்லவோ? ஆயினும், இவையெல்லாம், (விளக்கொளியில்) மயங்கி வீழும், விட்டிலின் இறக்கைக் காற்றினில் அசைந்தாடும், விளக்குச் சுடரின் நிழலைப்போன்று, நிலையற்றதென உணர்ந்து, மேலோர் காட்டிற்குச் சென்றனரே!

 

82.

அன்பனே! சமுசாரத்தின் தொடக்கத்தினின்று, மூவுலகங்களில் தேடியும், புலன் நுகர்ச்சிகளெனும் பெண்யானையிடம், ஆழ்ந்த, விளங்காத, மதம் கொண்டு திரியும், மனமெனும் ஆண்யானையைக் கட்டுதற்கான தறியொன்றினை, எமது கண்களாலும் கண்டிலோம், காது வழியும் கேட்டிலோம்.

 

அன்பனேயென்று தன் மனத்தினை ஆசிரியர் விளிக்கின்றார்.

புலன் நுகர்ச்சிகளைத் தேடியலையும், மனத்தினைக் கட்டுதற்கு (மனவடக்கமெனும்) தறியினைக் கண்டிலோம், கேட்டிலோமென்று பொருள். புலன் நுகர்ச்சிகளைப் பெண் யானைக்கும், அவற்றைத் தேடியலையும் மனத்தினை, ஆண் யானைக்கும் ஒப்பிடப்பட்டது,  அத்தகைய தறி அடுத்துவரும்  செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளது.

 

83.                                                                     

தான் விரும்பியவாறு திரிதல், இழிவற்ற உணவருந்தல், நல்லோருடன் இணக்கம், மனவமைதியொன்றையே பயனெனக் கொண்ட, மறையோதல், வெளியில் (நுகர்ச்சிகளைத் தேடி) அலையாத மனது – இவ்வுயர்ந்த விளைவுகளை, எத்தகைய தவத்தினால் அடையப் பெறலாமென, பல காலம் சிந்தித்தும் அறிந்திலோம்.

 

இழிவற்ற உணவு – துறவறம் பூண்டவர்கள், உணவை இரந்துண்டாலும், அது இழிவாகக் கருதப்படாது. அது அந்த நிலைக்கு விதிக்கப்பட்ட முறையாகும்.  

மறையோதல், பொதுவாக பயன்களை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அது சமுசாரச் சுழற்சியில்தான் முடியும். மனவமைதியை விழைவோர், இத்தகைய சுழற்சியினின்று விடுபடவேண்டும். அதனைத்தான் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

அடுத்து வரும் செய்யுட்கள் அத்தகைய தவத்தினை விவரிக்கின்றன.

 

84.

ஆசைகள் எனது உள்ளத்திலேயே ஒடுங்கிவிட்டன. இளமையும் கழிந்துவிட்டது. ஐயகோ! உறுப்புக்களின் வலிமைகள் (திறமைகள்) கேட்பாரின்றி, பயனற்றுப்போயின. எல்லாம் வல்ல, காலத்தின் விடாப்பிடியினால், முடிவு (சாவு) விரைவாக, நெருங்குகின்றதே, என்ன செய்வது? ஆகா, தெரிந்துகொண்டேன்! காமனை எரித்தோனின் (சிவனின்) இரு கால்களைப் பற்றுவதைத் தவிர வேறு கதியில்லை.

 

ஆசைகள் ஒடுங்கிவிட்டன – ஆசைகள் நிறைவேற வழியில்லாது, ஒடுங்கின.   

கேட்பாரின்றி – வலிமைகளை (திறமைகளை) பாராட்டுவோரின்றி, பயனற்றுப் போயின.

 

85.

அகிலத்தினை ஆளும் மகேசனிலோ (சிவனிலோ) அல்லது அகிலத்தின் உள்ளுறையும் ஜனார்த்தனனிலோ (விஷ்ணுவிலோ) மூலத்தில், வேறுபாடேதும், நான் காணவில்லை. ஆயினும், (எனக்கு) பிறையணிவோனிடமே பற்று.

 

அகிலத்தின் உள்ளுறை – அனைத்தின் இயக்கமாகவுள்ள தன்மை.

மூலத்தில் வேறுபாடில்லை – உருவங்களுக்கு அப்பாற்பட்ட, பரம்பொருள் ஒன்றேயாகிலும், அருவ வழிபாடென்பது இயலாதாகையால், ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமான உருவத்திலேயே, பரம்பொருளினை வழிபடுகின்றனர் என்பது பொருள்.

 

86.

வானோர் நதிக் (கங்கை) கரையில் எங்கோ, இரவின் அமைதி ஒலிகளிடையே, மதியின் வெண்மை ஒளியில் பளிச்சிடும், விரிந்த மணல்வெளியில், வசதியாக அமர்ந்துகொண்டு, பிறப்பு இறப்புகளின் பரிதவிப்பு தீர, சிவ, சிவ, சிவயென உரக்கக் கூவியழைத்து, கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிய, எப்போது இருப்போமோ?

 

இரவின் அமைதி ஒலிகள் – இரவின் அமைதி, பற்பல உயிரினங்களின் இனிய ஒலிகள் மலிந்தது.

வசதியாக அமர்ந்துகொண்டு – தியானத்திற்குகந்ததாகக் கருதப்படும் சுகாசனம்.

 

87.

யாவற்றையும் துறந்து, கனிந்த, கருணை நிறைந்த உள்ளத்துடன், தீமையில் முடிவுறும், சமுசாரத் தலைவிதியினை நினைவு கூர்ந்தவாறு, புண்ணிய வனத்தினில், இலையுதிர்காலத்தின் முழுமதியின் கதிரொளியில், அரனின் திருவடிகளின் நினைவொன்றே புகலாக, இரவு முழுதினையும், எப்போது யாம் கழிப்போமோ?

 

தீமையில் முடியும் தலைவிதி – மெய்யறிவு பெற்றாலன்றி தீராத, பிறப்பு இறப்பில்  இருத்தும், சமுசாரச் சுழல்.

இலையுதிர்கால முழுமதி – மழைக் காலத்திற்குப் பின் (புரட்டாசி, ஐப்பசி மாதங்கள்) வானம் மேகங்களின்றி இருக்கும். ஆனால், தமிழகத்தில் அப்போதுதான் மழை தொடங்கும். நாட்டின் மற்ற பகுதிகளில், ஆடி, ஆவணி மாதங்கள்தான் மழைக் காலம்.

 

88.

வாராணசியில் (காசி) வானோர் நதி (கங்கை) கரையில் வசித்துக்கொண்டு, கோவணம் அணிந்து, தலைமேல் கைகளைக் கூப்பி, ஓ கௌரி மணாளா! முப்புரம் எரித்தோனே! சம்போ! முக்கண்ணா! கருணை செய்வாயென உரக்கக் கூவியழைத்து, நாட்களை நொடியாகக் கழிப்பதெப்போது?

 

89.

கங்கை நீரில் குளித்து, தூய மலர்கள், பழங்களால், பெருமானே! உன்னை அருச்சித்து,  மலைக் குகையில், பாறைப் படுக்கையருகில், குருவின் ஆணைப்படி, பழங்கள் புசித்து, தியானிக்கத் தக்கோனே! உனது தியானத்தில் ஆழ்ந்து, தன்னிலே திளைத்து, காமனை எரித்தோனே! உனதருளினால், (முன்னம்) உள்ளங்காலில் சுறாமீன் சின்னம் உடைத்த (செல்வாக்குடைத்த) மனிதர்களிடம் (மன்னர்கள்) யான் செய்த சேவையினால் விளைந்த துன்பத்தினின்று, எப்போது விடுதலை பெறுவேனோ?

 

தன்னிலே திளைத்து – பரம்பொருளினைத் தன்னுள்ளே உணர்தல்.

உள்ளங்காலில், மகரச் (சுறா மீன்) சின்னம் இருந்தால், மிக்கு செல்வாக்குடையவராக இருப்பரென சாமுத்திரிகா இலட்சண சாத்திரம் கூறும்.

 

90.

சம்போ! தனியனாகி, ஆசைகளற்று, மனவமைதி அடைந்து, கைகளே (பிச்சை) பாத்திரமாக, திசைகளே ஆடையாக,  கருமங்களை அடியோடு களைய வல்லவனாக, என்று நான் ஆவேனோ?

 

தனியனாகி – பற்றுகளைத் துறந்து

கருமங்கள் – பிறப்பு இறப்புகளெனும் சமுசாரச் சுழல். தன்னையறிதலொன்றே இந்தச் சுழலை அடியோடு களையவல்லது.

 

91.

கைகளையே (உணவு) பாத்திரமாகக் கொண்டு, தூயதன்மையதான, பிச்சையெடுத்த  உணவினால் நிறைவுற்று, எங்காகிலும் கிடந்து, உலகினை வெறும் புல்லுக்கு நிகராக, எவ்வமயமும் காணும் யோகியருக்கு, உடல் துறக்குமுன்னரே, அகண்ட (முழுமையான) பேரானந்த உணர்வினையெட்டும் பாதை, சிவனின் அருளினால், எளிதாகக் கிடைக்கும்.

 

தூயதன்மையதான பிச்சை – இரந்துண்ணல், துறவு பூண்டவருக்கல்லால், பிறருக்கு இழி செயலாகக் கருதப்படும்.

அகண்ட  பேரானந்தம் – ஆன்மா, தன்னை பரம்பொருளின்றும் வேறாகக் கருதும் தன்மை நீங்குதல்.

 

92.

நைந்த, நூறு கிழிசல் கோவணம், அங்ஙனே கந்தையும், கவலையற்ற, பயன் கருதாத, பிச்சை உணவு, சுடுகாட்டிலோ அல்லது, காட்டிலோ உறக்கம், வேண்டியவராயினும் வேண்டாதவராயினும் சமமான நோக்கு – இங்ஙனமாக, யோகியர், மக்கள் நடமாட்டமற்ற இடத்தில், மிக்குத் தூய (இறைவன்) சிந்தனையில், செருக்கினால் தோன்றும் மதர்ப்பினை முற்றிலும் ஒழித்த மகிழ்ச்சியோடு, சுகமாக இருப்பர்.

 

நைந்த, நூறு கிழிசல் கோவணம், அங்ஙனே கந்தையும், கவலையற்ற, பயன் கருதாத, பிச்சை உணவு, சுடுகாட்டிலோ அல்லது, காட்டிலோ உறக்கம், சுதந்திரமாக, கட்டுப்பாடற்று திரிதல், எவ்வமயமும் அமைதியான மனது, யோகமெனும் பெருங்களிப்பில் நிலைப்பு - இவையுண்டாகில், மூவுல அரசாட்சியும் ஏனோ?

 

கந்தை – நைந்த, கிழிந்த, ஒட்டுப்போட்ட கந்தலாடை

பயன் கருதாத பிச்சை உணவு – துறவிகளுக்கு இடப்படும் பிச்சை

 

93,

கெண்டைமீன் துள்ளினால் கடலும் கொந்தளிக்குமோ? (அங்ஙனமே) பேரண்ட மண்டலமும் எம்மாத்திரம், அவாவினை வென்றவனுக்கு?

 

கெண்டைமீன் – கயல்மீனென்றும் கொள்ளலாம்.

எம்மாத்திரம் – அவாவினை வென்றவனை, பேரண்டத்தில் எதுவுமே (முழுதுமே) ஈர்க்க இயலாதென்று பொருள்படும்.

மண்டலம் - வட்டம் அல்லது வட்டத்தின் பரிதி.

 

94.

இலக்குமி அன்னையே! வேறு எவரையாது அணுகுவாய். எம்மை எதிர்நோக்காதே. இன்பங்களைத் துய்க்க யாம் விரும்பவில்லை. ஆசைகளற்றவர்களுக்கு, நீ யார்? அன்று (அப்போது) தைத்த புரச இலைத் தொன்னையில், தூயதான, பிச்சையெடுத்த, சத்துமாவினாலேயே இப்போது உயிர்வாழ விரும்புகின்றோம்.

 

நீ யார் – எமக்குத் தேவையற்றவள்.

புரச இலை – வைதீக சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுவது.

சத்து மாவு – பார்லி தானியத்தின் மாவு – ஏழைகளின் உணவுப் பொருள்.

 

95.

தரையே இனிய படுக்கையாக, கைகளே வசதியான தலையணையாக, வானமே கூரையாக, குளிர் இளந்தென்றலே விசிறியாக, ஒளிரும் மதியே விளக்காக, பற்றின்மையெனும் மனைவியோடு மகிழ்ந்து, சுகமாக, சாந்தமாக, புகழ்மிகு மன்னனைப் போன்று, முனிவன் உறங்குகின்றான்.

 

புகழ்மிகு – உடலெல்லாம் சாம்பல் (விபூதி) பூசி என்றும் பொருள் கொள்ளலாம்.

 

96.

பிச்சையெடுத்துப் புசித்து, மக்களிடையேயும் தனித்திருந்து, தன்னிச்சையாக எவ்வமயமும் நடந்துகொண்டு, கொள்வதிலும், கொடுப்பதிலும் பற்றின்மையைக் கடைப்பிடித்து, தெருவில் எறியப்பட்ட, கிழிந்த, நைந்த துணிகளை ஒட்டுப்போட்டு, அந்தக் கந்தலை அணிந்து, பெருமை கோராது, ஆணவமற்று, தன்னடக்கத்தினால் ஏற்படும் சுகமொன்றினையே விரும்புவோனாக – இங்ஙனம் எவரோ ஒரு தவசியே உண்டு. 

 

தன்னிச்சையாக – தன்னடக்கமுடையவர், பிறர் புகழ்ச்சி இகழ்ச்சிகளைக் கருதாது, தமது நடத்தையினை நியமத்துக்கொள்வர்.

கொள்வதிலும், பெறுவதிலும் பற்றின்மை – வருவது வரட்டும், போவது போகட்டுமென்ற பற்றறுத்த நிலை

தவசி – தவமியற்றுவோன், முனிவன்.

எவரோ – அரிது என்று பொருள்படும்.

 

97.

இவன் சண்டாளனா, முதல் மூன்று வருணத்தினனா, சூத்திரனா, தவசியா,  அன்றி தத்துவ, விவேக சிந்தனையில் வல்ல பெரும் யோகியா அல்லது வேறு யாரேயென, ஐயத்தினால் (தமக்குள்) வாதிடும் வம்பர்களைக் கண்ட யோகியர், அவர்தம் உரைகளை சட்டை செய்யாது (சினமோ, மகிழ்ச்சியோ கொள்ளாது), தமது வழியே செல்வர்.

 

முதல் மூன்று வருணத்தினர் – சூத்திரரல்லாத, மற்ற பிராமண, க்ஷத்திரிய, வைசியர்

தவசி – தவமியற்றுவோன்

எங்ஙனம் பரம்பொருளில் நாடு, இனம், மதம், குலம் ஆகிய எத்தகைய பாகுபாடும் கிடையாதோ, அங்ஙனமே, பரம்பொருளில் ஒன்றிய (யோகம்) யோகியருக்கும் எத்தகைய பாகுபாடும் கிடையாது. அப்படி பாகுபாடு செய்து நோக்கும் உலகோரின் சொற்களை யோகியர் மதிக்கமாட்டார்.

 

98.

உயிர் கொல்லாமையற்ற, முயற்சியின்றி அடையப்பெறுவதான காற்றினை, அரவங்களுக்கு உணவென, பிரமன் படைத்தான். பசுக்களை, புல்லினையுண்டு, தரையில் உறங்கும்படி படைத்தான். சமுசாரக் கடலினைத் தாண்டும் திறமையுடைய மக்களுக்கும், அத்தகைய வாழ்க்கை முறையையே அமைத்தான். அவற்றைக் கடைபிடித்தலால் அனைத்து குணங்களும் இறுதியாக முடிவடையச் செய்தான்.

 

அத்தகைய வாழ்க்கை முறை – கொல்லாமை, பிச்சையெடுத்து அல்லது எளிதாகக் கிடைப்பவற்றை உண்ணல், தரையிலுறங்கல் ஆகியவை.

அனைத்து குணங்களும் இறுதியாக முடிவடைய -  படைப்பிலுள்ள அனைத்துமே முக்குணங்களால் ஆனவை – சத்துவம், இராஜசம், தாமசம். இவை மூன்றையும் கடந்த, குணங்களற்ற, பிறப்பு இறப்புகளுக்கு அப்பாற்பட்ட நிலை எய்தல்.

 

99.

கங்கை நதிக் கரையில், இமயமலையின் பாறையில், பத்மாசனமிட்டமர்ந்து, பரம்பொருளின் தியானம் பழகும் விதிமுறையில், யோக நித்திரை அடைந்திருக்க, வயதில் முதிர்ந்த மான்களும், எத்தகைய அச்சமுமின்றி, தமது உடலை என்மீது தேய்க்கும் அந்த நன்னாளும் வருமோ?

 

பத்மாசனம் – தியானத்திற்கு உகந்ததாகக் கருதப்படும் அமரும் நிலை. 

உடலைத் தேய்த்தல் – பிராணிகளுக்கு உடலில் தினவு ஏற்பட்டால், மரம் அல்லது பாறை போன்ற கடினமான பரப்பின் மீது தமது உடலைத் தேய்த்து, தினவைத் தீர்த்துக்கொள்ளும். அங்ஙனம், நானும், பாறை போன்று, எத்தகைய உணர்வு, அசைவுமின்றி, பரம்பொருளில் திளைத்திருப்பேனோ, என ஆசிரியர் வியக்கின்றார்.

யோக நித்திரை – உடல் உணர்வற்று, பரம்பொருளில் திளைத்திருக்கும் சமாதி நிலை.

வயதில் முதிர்ந்த மான்கள் – மான் கன்று அச்சமறியாது. அதனால் அவை தெரியாமல் அத்தகைய தினவு தீர்க்க உடலை எங்கும் தேய்க்கலாம். ஆனால் வயது முதிர்ந்த மான்களோ, மனிதரிடம் அணுகா. அத்தகைய  வயது முதிர்ந்த மான்களுக்கும் மனிதரிடம் அச்சம் போகவேண்டுமென்றால், எத்தகைய உணர்வற்ற, அசைவற்ற தியான நிலையில் இருக்கவேண்டுமென ஆசிரியர் உணர்த்துகின்றார்.

 

100.

கைகளே தூய பாத்திரமாக, திரிந்து பெற்ற, குறையாத பிச்சையே உணவாக, பரந்த பத்து திசைகளே, களங்கமற்ற ஆடையாக, விரிந்த புவியே படுக்கையாக – இத்தகைய பற்றின்மையினைக் ஏற்றுக்கொண்டதன் விளைவாக, தன்னிலேயே ஆனந்தமுறுவர் பேறுடைத்தோர். இவர், இழிவுதரும் தொடர்புகளனைத்தினையும் துறந்து, (பிறப்பு இறப்புகளுக்கு மூலமாகிய) கருமங்களை (ஊழ்வினை) வேரோடறுப்பர்.  

 

பத்து திசை – எண்திசைகளுடன், மேலும், கீழும் சேர்த்து பத்தாகும்.

இழிவுதரும் தொடர்புகள் – இச்சைகளுக்காக, யாரையும் அண்டி வாழ்தல் இழிவினையே தரும்.

கருமங்கள் –  ஊழ்வினை மூன்று வகைப்படும் மொத்தம் சேர்த்த வினைகள் (sancita), அவற்றில் பயன் தரத் தொடங்கிவிட்ட வினைகள் (prArabdha), இனி பயன் தரப்போகும் வினைகள் (Agami). இப்போது பயன் தரத் தொடங்கிவிட்ட வினைகளால்தான் இந்தப், பிறவியும், உடலும். இவற்றை அனுபவித்தே தீர வேண்டும். மிகுதியுள்ள, இனி வரப்போகும் வினைப் பயன்களை, ஞானத்தினை அடைந்து, அழித்திட முடியும். ஞானம் அடையுமுன், இந்தப் பிறவியில் நாம் செய்யும் வினைகள், மொத்த வினைகளில் சேர்ந்துகொண்டே போகும். ஞானம் அடைந்த பின்னரும், உயிரிருக்கும் வரை, வினைகள் பயன் தரச்செய்யும். ஆனால், அவை அவனை பாதிக்காது.

 

101.

தாய் புவியே, தந்தை காற்றே, நண்பா நெருப்பே, நல்லுறவு நீரே, உடன் பிறப்பு ஆகாயமே! இரு கைகளையும் கூப்பி, உங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகின்றேன். உமது தொடர்பினால் உண்டான, பெரும் நல்வினைகளினால் மலர்ந்த, களங்கமற்ற ஞானத்தின் பயனாக, வல்லமைமிகு மருளனைத்தும் நீங்கப்பெற்று, பரம்பொருளினில் கலந்தேனே.

 

புவி, காற்று, நெருப்பு, நீர், ஆகாயம் – இவ்வுடல் ஏற்படுவதற்கு ஐம்பூதங்களே காரணம். தானென்ற ஆங்காரம் நீங்கி, பரம்பொருளில் கலக்கையில், இவ்வுடலெடுத்த காரியம் நிறைவேறிவிட்டது. அவ்வுடல் மரிக்கும்வரை உலகிலிருந்தாலும், அதன் ஆங்காரத்தன்மை நீங்கிவிட்டதால், அது வெறும் இயந்திர இயக்கமே. அதனால் அத்தகைய நிலையை அடைவதற்கு இவ்வுடலின் ஆதாரமாக விளங்கிய  ஐம்பூதங்களுக்கு இறுதி வணக்கம் தெரிவிக்கப்பட்டது.